ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது.
இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது வீரட்டாணமாக திகழ்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும் மேலும் திருநாவுக்கரசர் சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய. மூவர் இத்தலத்தை பற்றி பாடல் இயற்றி பாடல்பெற்ற தலமாக திகழ்கிறது.
ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தலம் வில்வம் மற்றும் பிஞ்சிலம் மரத்தை தல விருட்சகமாக கொண்டுள்ளது.
முன்னொரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்து அவர்களுக்குள் பகிர்ந்தளிக்க முயலும்போது முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபாடாத காரணத்தால் சினம் கொண்ட விநாயக பெருமான் இத்திருக்கோயிலில் ஒரு அமிர்தம் நிறைந்த குடத்தை ஒளித்துவைத்தார். அக்குடமே பிற்காலத்தில் இத்திருக்கோயிலில் சிவலிங்கமாக உருவானதால் (மாறியதால்) அமிர்தம்+கடம் ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார் இங்குள்ள மூலவர். இப்படி செய்த விநாயகர் இத்திருக்கோயிலில் ‘கள்ளவிநாயகர்’ என்று ஒரு தனி சந்நதி பெற்று ‘கள்ளவாரணம்‘ என பெயர் பெற்று அபிராமிபட்டர் மூலமாக ஒரு பதிகம் பாடல் பெற்றார் இவ்விநாயகர்.
இத்தலத்தில் 63 நாயன்மார்களில் இடம் பெற்றுள்ள குங்கிலிய நாயனார் மற்றும் காரிநாயனார் அருள் பெற்று சிவதொண்டு மேற்கொண்ட தலம் இதுவே. மேலும் சரபோஜி மன்னர் ஆட்சிகாலத்தில் பக்தன் ஒருவருக்காக அபிராமி அம்பாள் ‘தை அமாவாசையை’ முழுப் பௌர்ணமியாக்கி ‘அபிராமி அந்தாதி’ அருள செய்த தலம் இத்தலமே.
ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் வருடாவருடம் சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுமட்டுமல்லாது ஆடிப்பூரம் தை அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு வைபவம் நடைபெற்று வருவது குறிப்பிடதகுந்த ஒன்றாகும்.
மூலவர் மேற்கே பார்த்தும் அருள்மிகு அபிராமி அம்பாள் கிழக்கே பார்த்தும் அமையப் பெற்றதால் இத்தலம் நித்திய திருக்கல்யாண தலமாக திகழ்கிறது.
இத்திருக்கோயிலில் ஆயுஷ்ஹோமம். ஜாதகரீதியான மிருத்தியுஞ் செய்ய ஹோமங்களுக்கு கலசங்கல் வைத்து பூஜை செய்து ஹோமங்கள் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்பு.
சித்திரை மாதம் – 18 நாட்கள் மகம் நட்சத்திரத்தன்று எம சம்ஹார திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும்.தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 6 ம் நாள் அன்று கால சம்கார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை – சோம வாரம் 1008 சங்காபிசேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது.
புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும். ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி பூஜை ஆகியவை இத்தலத்தில் வெகு விமரிசையாக நடக்கும்,கந்தர் சஷ்டி, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் சிறப்பான விசேச நாட்கள் ஆகும். தை அமாவாசை அன்று அந்தாதி பாராயணம் பாடி நிலவு காட்டி வழிபடுதல் இங்கு விசேசம்.
மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
பூஜை நேரம் : காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
சிறப்புகள் : அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார். சிவபூஜையின்போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள்.
அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையின் முகத்தை நினைத்துக்கொண்டே, சரபோஜி மன்னரிடம் ஒரு அமாவாசை தினத்தை, பவுர்ணமி என்று கூறிவிட்டார். எனவே மன்னர், அந்நாளை பவுர்ணமி என நிரூபிக்காவிட்டால் மரணதண்டனை என்று சொல்லிவிட்டார்.
பட்டர் அக்னி வளர்த்து அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடினார். அவர் 79ம் பாடல் பாடியபோது, அபிராமி தன் காதில் அணிந்திருந்த சந்திர அம்சமான தோட்டை வானில் எறியவே, அது முழுநிலவாக காட்சி தந்தது. அபிராமி அந்தாதி பாடப்பட்ட நிகழ்ச்சி தை அமாவாசையன்று நடக்கிறது. அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.
அப்போது கொடிமரம் அருகில் கோயில் அர்ச்சகர்கள் ஒவ்வொரு அந்தாதியையும் பாடி, அம்பிகைக்கு தீபாராதனை காட்டுகின்றனர். 79ம் பாடல் பாடும்போது, வெளியில் மின்விளக்கினை எரியச்செய்கிறார்கள். இந்த வைபவத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர்.
திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் 100 வயது பூர்த்தி, கனகாபிஷேகம் 90 வயது, சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் செய்கின்றனர்.
கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை. இந்த பூஜை செய்பவர்கள், அருகிலிருக்கும் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரரையும் வழிபட்டால், இந்த வேண்டுதல் பூர்த்தியாவதாக ஐதீகம்.
திருக்கடையூரில் 60, 80-ம் திருமணம் செய்பவர்கள் திதி, நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்கத்தேவையில்லை. ஆண்கள் தங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபாக உள்ளது. அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக்கயிறின் தடம் இருக்கிறது. இதனை சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது மட்டுமே பார்க்க முடியும்.
தினமும் சாயரட்சை பூஜையின்போது மட்டும் ஆதிவில்வவன நாதருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. இவரது சன்னதிக்குள் மார்க்கண்டேயர், அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேக தீர்த்தம் எடுக்கச்சென்ற பாதாள குகை இருக்கிறது. திருக்கடையூர் கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மூர்த்திகள், அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர் மற்றும் புலத்தியர் வணங்கிய புண்ணியகரேஸ்வரர் ஆவர்.
இவர்களை வணங்கியபின்பே, மற்ற சுவாமிகளை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். இவ்விருவரையும் வணங்கும்போது பாவங்கள் நீங்கி, புண்ணியம் உண்டாவதாக நம்பிக்கை. புண்ணியகரேஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
இச்சன்னதி எதிரேயுள்ள சுவரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரை வணங்கி விட்டு பின், புண்ணியகரேஸ்வரரை வணங்க வேண்டும். இத்தலத்து முருகனைக் குறித்து, அருணகிரியார் திருப்புகழ் பாடியிருக்கிறார். எமன் லிங்கத்தின் மீது பாசக்கயிறை வீசியதால் ஏற்பட்ட வடு இன்னும் சிவலிங்கத்திருமேனியில் உள்ளது. கால சம்கார மூரத்தியாக உள்ளவர் செப்பு விக்ரகமாக முகத்தில் கோபம், கம்பீரம் எல்லாம் நிரம்பி சூலம் கீழ் நோக்கி காலன் மீது பாய்ச்சி, வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி எமனை எட்டி உதைக்கின்ற நிலையில் தெற்கு முகமாக நிற்கிறார்.
பல சித்தர்கள் வழிபாடு செய்த தலம். அதில் முக்கியமானவர் பாம்பாட்டி சித்தர் ஆவார்.நவகிரகங்கள் இங்கு கிடையாது. நவகிரகங்களுக்கு இங்கு பவர் இல்லை. கிரக சாந்தி செய்வோர் கால சம்கார மூர்த்திக்கே பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.
ராகு தோசங்கள் இங்கு கிடையாது. அம்பாள் மகா விஷ்ணு ஆபரணத்திலிருந்து உண்டானவள். 63 நாயன்மார்களில் காரி நாயனாரும், குங்கிலியக்கலய நாயனாரும் இந்த திருத்தலத்தில் வாழ்ந்து தொண்டு செய்து முக்தியடைந்தார்கள்.அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டர் அவதரித்த புண்ணிய பூமியும் இதுதான்.
இத்தலம் ஆயுள் விருத்தி தலம் என்ற சிறப்பு பெற்றதாகும். பிரார்த்தனை சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது. 59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்.
அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்த பூர்த்தி மணிவிழா செய்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவின் பிறமாநிலங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு பக்தர்கள் வருகிறார்கள்.
50 ஆம் கல்யாண ஆண்டு விழா, ஜாதக ரீதியான தோசங்கள் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் வழிபடுகின்றனர். இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள்.
இத்தல மூர்த்தியான காலசம்கார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழும் இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் அமிர்தகடேசுவரரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
ஆலய அமைப்பு :
திருக்கடையூர் கோவில், ஊரின் மையத்தில் வானளாவிய கோபுரங்களுடன் எழிலாகக் காட்சி அளிக்கிறது. மேற்கிலும் கிழக்கிலும் ஆலயத்துக்கு ராஜகோபுர வாயில்கள் இரண்டு அமைந்துள்ளன.
கிழக்கு கோபுரத்தில் முனீசுவரர் குடிகொண்டிருப்பதால் முனீசுவர கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதையட்டி அமுத புஷ்கரணி அமைந்துள்ளது. அமுதகடேஸ்வரர் மேற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். மேற்குக் கோபுர வாயில் வழியாக ஆலயத்தில் நுழைந்தால் இடதுபுறம் ஒரு நூற்றுக்கால் மண்டபம். அதே பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் அபிராமி அன்னைக்கு என தனி ஆலயம் அமைந்துள்ளது. அன்னை அபிராமி எக்கணமும் ஈசனை நோக்கிய வண்ணம் கிழக்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறாள்.
கர்ப்பக் கிரகத்தில் அன்னையின் தரிசனம் கிடைத்ததும் உடல் சிலிர்க்கிறது. பளபளக்கும் பட்டாடை. மின்னல்களை இறைக்கும் ஆபரணங்கள். தனித்து இருக்கும் சந்நிதியில் அமுதகடேஸ்வரர் உள்ளார். அவரது திருமேனியில் ஒரு பிளம்பும், பாசக்கயிறின் தழும்பும் காணப்படுகின்றன. அமுதகடேஸ்வரருக்கு பாலாபிஷேகம் நடக்கும் போது இந்த பாசக்கயிறின் தழும்பினைப் பளிச்சென காணலாம்.
அமுதகடேஸ்வரருக்கு நேர் எதிரில் இருக்கும் கொடிமரத்தில் அருள்மிகு பிள்ளையார் எழில்மிகு கோலத்துடன் காட்சி தருகிறார்.
அவரை அடுத்து அதிகார நந்தி வரவேற்கிறார். நந்தி தேவரை இருகரம் கூப்பித் தொழுது ஆலயத்தில் நுழைய வேண்டும். அவர் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தால், இடது பக்கம் திரும்பியவுடன் சுப்ரமணியர். அவரை அடுத்து மகாலட்சுமி. இந்த மூன்றாம் பிராகாரத்தில் வில்வவனேஸ்வரர், பஞ்சபூத லிங்கங்கள் ஆகியோர் வீற்றிருக்கிறார்கள். இவர்களோடு எமன், அறுபத்துமூவர், சப்த மாதர் ஆகியோர் அலங்கரிப்பதும் இந்தப் பிராகாரத்தைத்தான்.
மகா மண்டபத்தில் கள்ளவாரணப் பிள்ளையார் ஒருபுறம் அருள்பாலிக்கிறார். இன்னொருபுறம் காலசம்ஹார மூர்த்தி – எமனை எட்டி உதைத்த நிலையில் எழுந்தருளி இருக்கிறார். வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் தாங்கியுள்ளார். இடது திருவடியால் உதையுண்ட எமன் தலைகீழாக வீழ்ந்து கிடக்கிறார். இடது பக்கத்தில் பாலாம்பிகை திருமகள் கலைமகளாகிய சேடியருடன் விளங்குகிறார்.
எம பயம் போக்கும்கால சம்ஹார மூர்த்தி :
மகாமண்டபத்தின் வடபால் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில் இயமனை நிக்கிரகானுக்கிரகம் பண்ணின அவசரத்தில் (தோற்றநிலை) தெற்குமுகமாக எழுந்தருளியுள்ளார். வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட இயமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார். வீழ்த்தி கிடக்கும் இயமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது. இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.
இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாகிய விளங்குகின்றார். இம்மூர்த்திக்கெதிரில் வடக்கு முகமாக யமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித்திருக்கோலத்தில் காணப்படுகின்றார். இக்காலசங்கார மூர்த்திக்கு ஆண்டில் பன்னிரண்டுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இவர் சித்திரைப் பெருவிழாவில் ஆறாந்திருநாளன்று தான் வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.
கல்வெட்டுகள் :
கோவிலின் சுற்று மதில்களிலும், கருவறையிலும் ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை 1906 மற்றும் 1925-ம் ஆண்டுகளில் கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளன. முதலாம் ராசராசன் முதல் மூன்றாம் ராசராசன் வரையில் உள்ள ஒன்பது சோழ மன்னர்களுடைய வரலாற்று குறிப்புகளையும், கொடைத் தன்மையையும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகர பாண்டியன் ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம். விசயநகர மன்னர்களுள் கிருஷ்ண தேவராயரும், மூக்கண்ண உடையார் பரம்பரையில் விருப்பண்ண உடையாரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்களாக இருந்ததை இக்கல்வெட்டுகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.
1008 சங்கு அபிஷேகம் :
கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும்.
அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க முடியும்.
கோவிலுக்கு செல்ல வழிகள் :
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு மேற்கு மாவட்டங்களான கோவை,ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம், காரைக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் மயிலாடுதுறை வந்து செல்ல வேண்டும்.
சென்னை, சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வருபவர்கள் சீர்காழி, சட்டநாதபுரம் வழியாக கோவிலுக்கு செல்லலாம்.
நாகூர், நாகப்பட்டினம் பகுதிகளில் இருந்து வருபவர்கள் காரைக்கால் வழியாக வர வேண்டும். ரெயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை வந்து செல்லலாம்.
திருக்கடையூர் மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும், தரங்கம்பாடி, பொறையாரில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.